• இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, இலங்கை
  • +94 11 2777627
 rss blog twitter fb english sinhalafaq1

இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான தேசிய மகாநாடு

ph1

இலங்கை அரசியலமைப்புச் சபைச் செயலகம் 2017 ஜுன் 28 ஆம் திகதி புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மீதான ஒரு தேசிய மகாநாட்டை நடாத்தியது. காலை 9.30 மணியில் இருந்து இடம்பெற்ற முழுநாள் மகாநாடு இலங்கை மக்களுக்காக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களைக் கைக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கு உதவும் பொருட்டு பல்துறைசார் வீச்சிலான பங்காண்மையாளர்களை ஒன்றுகூட்டி வருவதை இலக்காகக் கொண்டிருந்தது. கௌரவ பிரதம அமைச்சர், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மாகாண அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைப் பொலிசார், சட்ட மா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களிலிருந்து  முக்கிய உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் புலமைசார் உறுப்பினர்கள் என்போரின் பிரசன்னத்தால் இந்நிகழ்வு கௌரவிக்கப்பட்டிருந்தது.

 

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதிப் பிரதம நீதியரசர் மேன்மைதங்கிய நீதிபதி டிக்காங் மொசநெக்க (Dikgang Moseneke) இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். மகாநாட்டின் நிகழ்ச்சிநிரல் இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்பு உத்தியோகத்தர்களின் உரைகள் மற்றும் நுட்பரீதியான சமர்ப்பணங்களை உள்ளடக்கியிருந்தது. மகாநாட்டின் ஆரம்ப உரை பாராளுமன்றப் பிரதிச் சபாநாயகரும் அரசியலமைப்புச் சபையின் பிரதித் தவிசாளருமான கௌரவ சுமதிபாலவினால் ஆற்றப்பட்டதுடன் அவர் இலங்கையின் எல்லா சமூகங்களினதும் தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதையும், ஒரு முன்னேற்ற அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலின் ஒரு பாகமாகவும் இலக்கு வைக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையை எடுத்துக்காட்டி மகாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார்.


இலங்கைப் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை உருவாக்குவதில் எதிர்கொள்ளப்படும் தற்போதைய சவால்கள் மற்றும் செயன்முறைகளாகிய அரசின் தன்மை,  தேர்தல் முறைமை, அதிகாரப் பரவலாக்கல் முறைமை, அரசின் மதம் என்னும் விடயங்கள் பற்றிய  ஒரு தகவல் நிறைந்த பேச்சை ஆற்றியிருந்தார். அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையானது முந்திய 1972 மற்றும் 1978 செயன்முறைகளை விட வேறுபட்டது எனப் பிரதம அமைச்சர் தெரிவித்தார்.


பிரதம அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா முன்னாள் பிரதிப் பிரதம நீதியரசர் “அரசியலமைப்பு தொடர்பாக ஓர் இணக்கத்தினை எட்டுதல் - தென்னாபிரிக்க அனுபவம்” என்ற தலைப்புத் தொடர்பாகப் பேசியிருந்தார். நீதிபதி மொசநெக்க 1993 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க இடைக்கால அரசியலமைப்பை வரைந்த தொழில்நுட்பக் குழுவில் சேவையாற்றிய, தென்னாபிரிக்க உச்சச் சட்ட மேதைகளில் ஒருவராகப் பரவலாகக் கணிக்கப்படுகிறார். தென்னாபிரிக்காவுக்கான இடைக்கால அரசியலமைப்பு வரைபின்பொழுது ஐக்கியம், பல்வகைத்தன்மை, மீளிணக்கம்,  ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான இணக்கம் என்பவற்றின் பொது விழுமியங்களை உள்ளடக்கிய ஓர் ஆவணத்தைத் தமக்கென உருவாக்கிக்கொள்ள எண்ணற்ற சவால்களைத் தென்னாபிரிக்க மக்கள் வெற்றி கொண்டார்கள் எனத் தனது உரையில் எடுத்துக்காட்டினார்.


நீதிபதி மொசநெக்கேவின் உரையைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சபையின் மேலதிகச் செயலாளர் திருமதி யுரேஷா பெர்னாண்டோ தனது உரையில், தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலின் நுட்பங்கள் மற்றும் கட்டங்கள் அத்துடன் அரசியலமைப்புச் சபை செயலகத்தின் பணிகள் என்பன குறித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு மறுசீரமைப்பு மீதான பொதுப் பிரதிநிதித்துவக் குழுவின் தவிசாளர் திரு. லால் விஜயநாயக்க அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து பின்னூட்டல்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக 2016 இல் மேற்கொள்ளப்பட்ட பொதுக் கலந்தாலோசனைச் செயன்முறைகள் தொடர்பாக ஒரு பேச்சை நிகழ்த்தினார்.


அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழாத்தின் ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் மீதான நுட்ப ரீதியான சமர்ப்பணங்களை மகாநாட்டின் பிற்பகல் அமர்வு உள்ளடக்கியிருந்தது. இந்த ஆறு அறிக்கைகளினதும் சமர்ப்பணங்கள் நிபுணர்களான பேராசிரியர் கமேனா குணரத்தன, திரு. நிரான் அன்கெற்றல், திரு. அசோக்க குணவர்தன,  பேராசிரியர் கபில பெரேரா, பேராசிரியர் நவரத்ன பண்டார மற்றும் திருமதி சாமின்ரி சபரமாது ஆகியோரால் முறையே அடிப்படை உரிமைகள், நீதித்துறை, பொது நிதி, சட்டமும் ஒழுங்கும்,  பொதுச்சேவை மற்றும் மத்திய மாநில உறவுகள் போன்ற தலைப்புக்களில் நிகழ்த்தப்பட்டன.


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் அவசியம் மற்றும் நாட்டின் உச்சமாக விளங்கும் ஓர் அரசியலமைப்பை உருவாக்கும்பொழுது வெற்றி கொள்ளத் தேவையான எண்ணற்ற பல சவால்கள் என்பன தொடர்பாகக் கூடியிருந்த மக்களிடையே பேசினார். மகாநாட்டின் இறுதி அமர்வு கௌரவ (டாக்டர்) ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம். ஏ. சுமந்திரன் போன்ற வழிப்படுத்தல் குழுவின் முகாமைத்துவக் குழுவின் இணை அனுசரணையாளர்களால் வழிநடாத்தப்பட்ட ஒரு வினா, விடை அமர்வின் வடிவத்தில் இடம்பெற்றது. உபகுழு அறிக்கைகள், முக்கிய சவால்கள் மற்றும் தற்போது அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையின் பாகங்கள் தொடர்பான கேள்விகள் மகாநாட்டின் பங்குபற்றுனர்களால் தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டன. வினா, விடை அமர்வுடன் மகாநாடு பி.ப. 4.30 மணியளவில் முடிவடைந்தது.


இது அரசியலமைப்புச் சபைச் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு மீதான ஓர் அங்குரார்ப்பண மகாநாடாகும். அத்துடன் இது இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பான செயலகத்தின் வெளிக்கள முயற்சிகளின் ஒரு பாகமாக நடாத்தப்பட்டது.